செய்திகள்

ஆனைமலையில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

Published On 2017-10-31 09:56 GMT   |   Update On 2017-10-31 09:56 GMT
ஆனைமலையில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில், விவசாயி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
ஆனைமலை:

கோவை மாவட்டம் ஆனைமலை சேத்துமடையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 71). இவரது மனைவி வேலாத்தாள் (65). இவர்களது ஒரே மகள் திருமணமாகி வெளியூரில் உள்ளார்.

இந்நிலையில் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு ஒட்டிய பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வேலுச்சாமி விவசாயம் செய்து வந்தார். காட்டுப்பன்றி மற்றும் யானை விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது.

சோளப்பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து காக்க அங்கேயே குடிசை அமைத்து மனைவியுடன் வசித்து வருகிறார்.

இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் காட்டுயானை வேலுச்சாமியின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. யானை புகுந்ததை அறிந்த வேலுச்சாமி தப்பி ஓடினார். அவரது மனைவி குடிசைக்குள் பதுங்கினார்.

ஓட்டம் பிடித்த விவசாயியை காட்டுயானை விடாமல் விரட்டியது. திடீரென ஆவேசமாக துதிக்கையால் வேலுச்சாமியின் தலையில் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்தார். பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றது. குடிசையில் பதுங்கியிருந்த வேலாத்தாள் கணவரை தேடி ஓடிவந்தார். அப்போது வேலுச்சாமி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம், வனவர் மணிகண்டன், ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சோளக்காட்டில் பிணமாக கிடந்த வேலுச்சாமியின் உடலை மீட்டு வேட்டைக்காரன் புதூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனைமலை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ள காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மீண்டும் யானை காட்டுக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News