செய்திகள்

சேலத்தில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதல்: நிதி நிறுவன ஊழியர் பலி

Published On 2017-10-29 20:42 IST   |   Update On 2017-10-29 20:42:00 IST
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் நிதி நிறுவன ஊழியர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:

சேலம், குகை, தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் கதிரவன் (வயது 28). இவர் சேலத்தில் உள்ள தனியார் சீட் பண்ட்ஸ் (நிதி நிறுவனம்) நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் கலெக்சன் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த ஜெயசித்ரா (24)வுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் அணிஸ் என்ற குழந்தை உள்ளது.

இந்த நிலையில், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் ஜெயசித்ராவின் சகோதரர் தினேஷ்(25) சேலத்தில் உள்ள தனது தங்கையை பார்த்து விட்டு, சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு பணி முடிந்து சேலத்திற்கு வந்தார்.

பின்னர் அவர் தனது தங்கை ஜெயச்சித்ராவின் வீட்டில் தங்கி விட்டு இன்று காலையில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அப்போது கதிரவன், தனது மாப்பிள்ளையான தினேசை சேலம் புதிய பஸ் நிலையத்தில் தர்மபுரி பஸ்சில் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு கொண்டலாம் பட்டி பைபாஸ் சாலை வழியாக வந்தார்.

காலை 9.30 மணி அளவில் கந்தம்பட்டி பகுதியில் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ் கதிரவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் கதிரவன் பஸ்சுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தினேஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இந்த விபத்தை கண்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். மேலும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அங்கு திரண்டனர். அவர்கள் உயிருக்கு போராடிய தினேசை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News