செய்திகள்

திருச்சி-புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2017-10-26 15:51 IST   |   Update On 2017-10-26 15:52:00 IST
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கடலோர பகுதிகளான அறந்தாங்கி, மணமேல்குடி, நாகுடி, கோட்டைப்பட்டினம், திருவப்பாடி உள்ளிட்ட பகுதியில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் தற்போது விவசாயிகள் பலர் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். அதற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதே போன்று திருச்சி மாநகரிலும் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

Similar News