செய்திகள்
கோப்புப்படம்

கந்துவட்டி உயிரிழப்பு குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவு: நெல்லை எஸ்.பி. பேட்டி

Published On 2017-10-24 16:46 IST   |   Update On 2017-10-24 16:46:00 IST
கந்துவட்டி பாதிப்பால் தீக்குளித்த 3 பேர் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று தன் மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் ஆருண்யா, அட்சயா ஆகியோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளித்தார். இதில், இசக்கிமுத்து தவிர மற்ற மூவரும் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இசக்கி முத்துவுக்கு கடன் கொடுத்து கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக முத்துலட்சுமி, அவரது கணவர் தளவாய்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். மாமனார் காளிராஜ் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த விசாரணை குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அருண் சக்தி நிருபர்களிடம் கூறியதாவது:-


புகார் மனுக்களை பெறுவதில் போலீசார் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையில் நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தீக்குளித்த இசக்கிமுத்து குடும்பத்தினர் குழந்தைகளின் காதுகுத்து விழா மற்றும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. முழு விசாரணையும் முடிந்தபிறகே எதையும் ஆதாரப்பூர்வமாக வெளியிட முடியும். விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சனை உள்ள இடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News