செய்திகள்

பயிர் காப்பீடு தொகை வழங்காததால் வயலில் கருப்பு கொடி கட்டி நாகை விவசாயிகள் போராட்டம்

Published On 2017-10-23 16:31 GMT   |   Update On 2017-10-23 16:31 GMT
நாகை மாவட்டத்தில் வயல்களில் கருப்பு கொடியை நட்டு உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கோ‌ஷமிட்டப்படி போராட்டம் நடத்தினர்.
நாகை:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கிய சில விவசாயிகள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்தாண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தில் நாகை விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தற்போது சம்பா சாகுபடிக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்கப்படவில்லை.

இதனால் நாகை விவசாயிகள் இதுபற்றி கலெக்டர் சுரேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து நாகை அருகே கீழ்வேளூர் அடுத்த வடக்குவேலியை சேர்ந்த விவசாயிகள் இன்று 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அங்குள்ள வயல்களில் கருப்பு கொடியை நட்டு உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்க கோரி கோ‌ஷமிட்டப்படி போராட்டம் நடத்தினர்.

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரை தண்ணீர் வந்து சேரவில்லை. ஏற்கனவே கடந்தாண்டு பயிர் காப்பீடடு தொகையும் இதுவரை வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். எங்களால் சம்பா சாகுபடிக்கு நடவு பணியை எப்படி மேற்கொள்ள முடியும்?

எனவே தான் அரசின் கவனத்தை ஈர்க்க இன்று வயலில் இறங்கி கருப்பு கொடி நட்டு போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விவசாயிகளின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News