செய்திகள்

50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Published On 2017-10-22 16:28 IST   |   Update On 2017-10-22 16:28:00 IST
50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாகை:

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து 7 டிரைவர்கள், ஒரு கண்டக்டர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து போக்குவரத்து கழகங்களில் உள்ள கட்டிடங்கள் பெரும் பாலான மோசமாக இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், அரசு இதுபற்றி ஆய்வு நடத்தி சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர், மற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இதை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை மாவட்டங்களில் ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் இன்று காலை வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். அப்போது மழை காலங்களில் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், பேரிடர் உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும் என்றும் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உடை, உடமை மற்றும் தங்கும் வசதி போன்றவை உடனுக்குடன் வழங்குவது குறித்தும் அனைத்து துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினர்.

கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பொறையாறில் பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியான துயர சம்பவத்துக்கு பிறகு அரசு அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு கட்டிடங்கள் இருந்தால் ஆய்வு நடத்தி உடனடியாக இடிக்கப்படும். மேலும் மோசமான நிலையில் உள்ள கட்டிடங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பழமையான கட்டிடங்கள் இடித்து அப்புறப்படுத்தி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டவும் ஏற்பாடு செய்யப்படும். பழமையான கட்டிடம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கலாம்.

பொறையாறு பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியான இடத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விரைந்து வந்தார்.

அப்போது அமைச்சரை , போக்குவரத்து கழக ஊழியர்கள், மற்றும் தொழிற் சங்கத்தினர் முற்றுகையிட்டனர். பழமையான கட்டிடத்தால் தான் 8 பேர் பலியானதாக குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் இன்று அமைச்சர் ஓ.எஸ். மணியன், பழமையான அரசு அலுவலகங்கள் அனைத்தும் இடித்து அகற்றப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News