செய்திகள்

திருப்போரூரில் இரவில் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்

Published On 2017-10-21 15:21 IST   |   Update On 2017-10-21 15:21:00 IST
திருப்போரூரில் சுவாமியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் பக்தர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்போரூர்:

திருப்போரூரில் புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் உள்ளது. புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முருகப்பெருமான் பல்வேறு உருவங்களில் தோன்றும் சூரபத்மனை வதம் செய்யும் இந்த கந்தசஷ்டி விழாவின் சிறப்பம்சமாக திருப்போரூரில் பல்வேறு அசுர உருவங்களில் 6 தலையுடனும் 6 உடல் பாகங்களில் பொம்மைகள் தயார்செய்யப்பட்டு கந்தசஷ்டி விழாவின் போது தினமும் இரவு சுவாமி வீதி உலாவின்போது அசுர உருவ பொம்மைகளை தூக்கி பக்தர்கள் ஆடிக் கொண்டு வீதி உலா வருவர். மற்ற கோயில்களில் ஒரே ஒரு உருவபொம்மையும் தனித்தனியே 6 தலைகளும் இருக்கும்.

தமிழகத்தில் வேறெந்த கோயிலிலும் 6 தலைகள், 6 உடல் அமைப்பு அசுர பொம்மைகள் இல்லாத சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. அதாவது மற்ற கோயில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும்போது ஒரே ஒரு உடல் அமைப்புடன் தலையை மட்டும் மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் இக்கோயிலில் மட்டும் தான் தனித்தனியே தலைகளுடன் உருவபொம்மைகளுடன் சூரசம்ஹாரம் நடைபெறுவது சிறப்பு.

ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழாவிழாவிற்கு முன்னதாகவே உருவ பொம்மைகள் தயார்செய்யப்பட்டு விடும். இந்த ஆண்டு வழக்கமாக செய்யும் இடத்தில் இல்லாமல் புதிதாக வேற இடத்தில் உருவபொம்மைகள் செய்யப்பட்டன. நேற்று இரவு சுவாமி வீதி உலாவின்போது தான் உருவபொம்மைகள் கொண்டு வரப்பட்டன.

நேற்று முதல் நாள் வினாயகர் உருவபொம்மை மாடவீதி உலா வரும். ஆனால் செய்யப்பட்டு வந்த அந்த பொம்மையை பக்தர்கள் தூக்கி ஆடிவருவதற்கு ஏற்ற வசதிகள் செய்யாமலும், அதிக எடை கொண்டதாக இருந்ததாலும் அதை பயன்படுத்த முடியவில்லை.

இதனால் உருவபொம்மை இல்லாமல் சுவாமி மட்டும் வீதி உலா வந்தார். இதனால் மாடவீதி முழுவதும் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். சுவாமி மாடவீதி சுற்றி வந்து கோயிலுக்குள் சென்றதும் இரவு 10 மணியளவில் சுவாமியை சுமந்து செல்லும் ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் பக்தர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் இல்லாததால் கோயில் மேலாளரிடம் சராமாரியாக வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு சூரபொம்மைகள் சரியாக இல்லை என்றும் நேற்று முதல் நாள் சூரபொம்மைகள் இல்லாது சுவாமி வீதி உலா வந்ததை சுட்டிகாட்டினர். இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்ததையும் கூறினர். உடனடியாக இன்று இரவு நடைபெறும் சுவாமி வீதி உலாவிற்குள் மற்ற சூர பொம்மைகளை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டனர். இன்று அனைத்தும் சரி செய்யப்படும் என மேலாளர் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News