செய்திகள்
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தின் முகப்பு தோற்றம்.

புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: ரூ.647 கோடியில் திட்டப்பணிகளை தொடங்கிவைக்கிறார் முதல்வர்

Published On 2017-10-14 11:07 IST   |   Update On 2017-10-14 11:07:00 IST
புதுக்கோட்டையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.647 கோடியில் திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
புதுக்கோட்டை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர் ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மிக சிறப்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 30.6.2017 அன்று மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை (14-ந்தேதி, சனிக்கிழமை) நடைபெறுகிறது.

தமிழக சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரை ஆற்றுகிறார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்து ரூ.646.92 கோடி மதிப்பிலான முடிவுற்ற 71 திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், ரூ.4.64 கோடி மதிப்பிலான 24 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 32,066 பயனாளிகளுக்கு ரூ.190.19 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ப.குமார், அன்வர்ராஜா, செந்தில்நாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரத்தின சபாபதி, ஆறுமுகம், வாரியத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

முன்னதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வரவேற்கிறார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் நன்றி கூறுகிறார்.

புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவு.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று மதியம் 1 மணியளவில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவர் பி.கே. வைரமுத்து, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழாவையொட்டி இன்று காலை புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், கடம் பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அங்கு அவரை அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.பி.க்கள் ரத்தினவேல், குமார், கலெக்டர்கள் ராசாமணி, கணேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

அதனை ஏற்றுக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் புதுக்கோட்டை புறப்பட்டு செல்கிறார். மாலை 3 மணிக்கு விழா தொடங்குகிறது. விழா முடிந்ததும் இரவு 7 மணிக்கு திருச்சியில் விமானம் மூலம் புறப்பட்டு அவர் சென்னை செல்கிறார். விழாவையொட்டி புதுக்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News