செய்திகள்

நாகையில் மீன்கள் விலை கடும் வீழ்ச்சி: மீனவர்கள் கவலை

Published On 2017-10-13 15:49 IST   |   Update On 2017-10-13 15:49:00 IST
புரட்டாசி மாதத்தையொட்டி மீன் விற்பனை பாதியாக குறைந்ததால் நாகை மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

நாகப்பட்டினம், அக்.13-

நாகை மாவட்டத்தில் 56 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன்பிடித்தொழிலில் ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதிக்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது வழக்கம். இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்கள் செய்யும் இடையூறுகளால் நாகை மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் மந்தமாகி வருகிறது.

நாகையில் தினமும் ரூ.1 கோடிக்கு மீன் வியாபாரம் நடைபெறும். நாகையில் பிடிக்கப்படும் மீன், இறால், கணவாய், நண்டு ஆகியவை வியாபாரிகளால் வாங்கப்பட்டு சென்னை, தூத்துக்குடி, கேரளா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். தினமும் 5 டன் மீன்கள் ரூ.1 கோடி அளவுக்கு விற்பனையாகி வந்த நிலையில் புரட்டாசி மாதத்தையொட்டி மீன் விற்பனை பாதியாக குறைந்துவிட்டது. கடந்த 26 நாட்களாக மீன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் கணிசமாக குறைந்துவிட்டது.

தற்போது முதல்தர இறால் கிலோ ரூ.1000-க்கும், 2-ம் தர இறால் ரூ.800-க்கும், 3-ம் தர இறால் ரூ.600-க்கும், 4-ம் தர இறால் ரூ.500-க்கும், கழிவு இறால் ரூ.350-க்கும், ஒரு கிலோ நண்டு ரூ.300-க்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்விலை வீழ்ச்சியடைந்ததால் மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Similar News