செய்திகள்
கொள்ளை முயற்சி நடந்த பண்ணை வீடு

சுங்குவார்சத்திரம் அருகே கொள்ளையனை அடித்து கொன்ற காவலாளி

Published On 2017-10-04 16:28 IST   |   Update On 2017-10-04 16:33:00 IST
சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட கொள்ளையனை காவலாளி அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்:

பெங்களூரைச் சேர்ந்தவர் சுதாபிரியன் (80) மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவருக்கு சுங்குவார் சத்திரம் அருகே உள்ள பொடாவூர் பகுதியில் பண்ணை வீடு உள்ளது. மரம், செடிகளுக்கு மத்தியில் விசாலமான விடப்பட்ட காலி இடத்திற்கு மத்தியில் வீடு கட்டுப்பட்டுள்ளது.

இந்த வீட்டுக்கு எப்போதாவது விடுமுறையில் வந்து தங்கி செல்வார்கள். காவலாளியாக சரவணன் (45) இருந்தார். பண்ணை வீட்டிற்கு எதிரே மனைவி யமுனாவுடன் வசித்து வருகிறார்.

நேற்றிரவு அவர் பண்ணை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பண்ணை வீட்டின் கதவை கடப்பாறையால் உடைக்க முயற்சி செய்தது.

சத்தம் கேட்டு எழுந்த சரவணன் கொள்ளையர்கள் மூவரையும் எதிர்த்து போராடினார். 3 பேருடன் துணிச்சலுடன் மல்லுக் கட்டினார். இதனால் கொள்ளையர்கள் என்ன செய்வது என்று தடு மாறினார்கள்.

3 கொள்ளையர்களும் சரவணனிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேர போராட்டத்திற்கு இடையே 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவன் மட்டும் சிக்கி கொண்டான்.

சத்தம் கேட்டு சரவணனின் மனைவி யமுனா ஓடி வந்தார். கொள்ளையனை பிடிக்க கணவருடன் அவரும் போராடினார்.

உருட்டுகட்டையால் கொள்ளையனை சராமாரியாக சரவணன் தாக்கினார். அவரும் திருப்பி தாக்கினார். யமுனாவுக்கு உருட்டு கட்டை அடி விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சரவணன், கொள்ளையனின் தலை, முகம் போன்ற பகுதியில் சரமாரியாக தாக்கினார். நிலை குலைந்த கொள்ளையன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானான்.

கணவனும், மனைவியும் கொள்ளையனிடம் நீண்ட நேரமாக போராடி தப்பித்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ரத்த காயத்துடன் இருந்த யமுனாவை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

கொலையுண்ட கொள்ளையனுக்கு சுமார் 45 வயது இருக்கும். அவன்யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவனோடு வந்த 2 கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Similar News