செய்திகள்

சசிகலா, இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு தொடர்ந்து பாதுகாப்பு

Published On 2017-10-03 15:58 IST   |   Update On 2017-10-03 15:58:00 IST
சசிகலா, இளவரசிக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருப்போரூர்:

பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கிச்சென்ற பங்களா உள்ளது.

சசிகலா, இளவரசி பெயரில் உள்ள இந்த பங்களாவிற்கு ஜெயலலிதா அடிக்கடி வந்து தங்கியிருந்தார். இந்த பங்களாவின் ஒரு பகுதி சொத்துகுவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இங்கு வந்து தங்கிசெல்லும் போது பங்களாவைச் சுற்றிலும் சுமார் 15-க்கும் மேற்பட்ட செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் அவர் முதல்வராக இல்லாதபோது குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த பங்களாவிற்கு போடப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

தற்போது அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் தற்போது சசிகலா பெயரில் உள்ள இந்த பங்களாவிற்கு தமிழக போலீசாரின் பாதுகாப்பு கடந்த சில மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த பங்களாவைச்சுற்றி உள்ள பகுதியில் யாரும் எளிதாக உள்ளே நுழைய முடியாத நிலை இருந்தது.

தனியார் நிலங்களுக்கு செல்வோர் பலத்த சோதனைக்கு பிறகே செல்ல முடியும். தற்போது எந்தவித கெடுபிடிகளும் இல்லாமல் எவ்வித சோதனைகளும் இல்லாமல் செல்லும் நிலை உள்ளது.

தற்போது பங்களா நுழைவாயில் மற்றும் பங்களாவிற்கு பக்கவாட்டில் உள்ள 2 தனியார் வழிகள் உள்ளிட்ட 3 இடங்களில் மட்டுமே ஷிப்டுக்கு 6 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

பங்களாவிற்குள் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜன் சோழிங்கநல்லூரை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இதற்காக சிறையில் இருக்கும் சசிகலா பரோல் கேட்டு கணவரை பார்க்க சென்னைக்கு வர உள்ளார். அப்படி வந்தால் மருத்துவ மனையிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த பங்களாவிற்கு வந்து செல்வாரா? என்று தெரியவில்லை.

Similar News