செய்திகள்

பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்: 167 பேர் கைதாகி விடுதலை

Published On 2017-09-28 21:27 IST   |   Update On 2017-09-28 21:27:00 IST
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 167 பேரை போலீசார் கைது செய்து விடுதலை செய்தனர்.
அறந்தாங்கி:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதி குழு சார்பில், பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீட்டு தொகையை பாரபட்சம் இல்லாமல் வழங்கவேண்டும், விவசாயிகளின் பயிர்கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும், காவேரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தென்றல்கருப்பையா முன்னிலை வகித்தார். ஊர்வலமாக புறப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் பீமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட 38 பெண்கள் உட்பட 112 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 167 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Similar News