செய்திகள்

ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் பலத்த மழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது: பொதுமக்கள் அவதி

Published On 2017-09-28 15:21 GMT   |   Update On 2017-09-28 15:21 GMT
ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் பலத்த மழை காரணமாக வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக ராசிபுரம் பகுதியில் 45 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

ராசிபுரம்-45, புதுச்சத்திரம்-18, மங்களபுரம்-12, திருச்செங்கோடு-8, சேந்தமங்கலம்-7, குமாரபாளையம்-5.

மாவட்டத்தின் மொத்த மழை அளவு 95 மி.மீட்டர் ஆகும்.

புதுச்சத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது. ஆங்காங்கே வயல்வெளியில் மழைநீர் தேங்கி நிற்பதை காண முடிகிறது. புதுச்சத்திரம் அம்மன் நகர் பகுதியில் சுமார் 50 வீடுகளை மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

நீர்வழித்தடங்களில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளே மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் அப்பகுதியில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரை பொக்லைன் எந்திரம் உதவியுடன் வாய்க்கால் தோண்டி அப்புறப்படுத்தினர்.

அதேபோல் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம், குருக்கபுரம், காக்காவேரி உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு இடியுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக சிங்களாந்தபுரம், சந்தைபேட்டை பகுதியில் காளியம்மன் கோவில் அருகே வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. ஒருசில வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதற்கிடையே ராசிபுரம் அருகே உள்ள குருக்கபுரம் ஏரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது இடி விழுந்ததாகவும், அதன் காரணமாக ஏற்கனவே ஏரியில் தேங்கி இருந்த தண்ணீரில் நீர் ஊற்று உருவாகி அதில் இருந்து தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வெளி வருவதாகவும் நேற்று தகவல் பரவியது. ஆனால் அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் சந்திரசேகரபுரம் மற்றும் தட்டான்குட்டையில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.
Tags:    

Similar News