செய்திகள்

ஒடுகத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது

Published On 2017-09-23 18:47 IST   |   Update On 2017-09-23 18:47:00 IST
ஒடுகத்தூர் அருகே இளம்பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்:

ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம், காதலிப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண் மற்றும் அவரது தங்கையை, மணிகண்டன் வீடு புகுந்து சில்மி‌ஷம் செய்ததாக கூறப்படுகிறது. இளம்பெண்களின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட மணிகண்டனை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

அதில் மணிகண்டனின் தாயார் மஞ்சுளா உள்பட இரு தரப்பை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.

இதனிடையே மோதலில் காயம் அடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயார் மஞ்சுளாவை பார்க்க அவரது மகன் மணிகண்டன் நேற்றிரவு மருத்துவமனைக்கு சென்றார்.

மணிகண்டனை பார்த்த வேப்பங்குப்பம் போலீசார் அவரை கைது செய்ய பிடித்தனர். அப்போது மணிகண்டன் போலீசாரிடம் தகராறு செய்ததாகவும், இதனால் போலீசார் ஆத்திரமடைந்து அவரை தாக்கியதாகவும் தெரிகிறது.

இதைப்பார்த்த மணிகண்டனின் உறவினர்கள் போலீசாரை முற்றுகையிட்டு மணிகண்டனை விடுவிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறகாவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, மணிகண்டன் மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த சிவராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News