செய்திகள்

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டு சிறை

Published On 2017-09-19 13:45 IST   |   Update On 2017-09-19 13:45:00 IST
அரியலூர் அருகே லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறு களத்தூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஸ்வநாதன். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக களத்தூர் பகுதி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனை அணுகினார். அப்போது அவர் விஸ்வநாதனிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விஸ்வநாதன், இது குறித்து விஸ்வநாதன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சீனிவாசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து சீனிவாசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News