செய்திகள்

ஆண்டிமடம் அருகே 12 பிள்ளைகளின் தந்தை கொலை: நகை - பணத்துக்காக நடந்ததா?

Published On 2017-09-13 19:05 IST   |   Update On 2017-09-13 19:05:00 IST
ஆண்டிமடம் அருகே 12 பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 80), விவசாயி. தனக்கு சொந்தமான சுமார் 30 ஏக்கர் நிலத்தில் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தார்.

இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஜெகதாம்பாள். அவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களும் மதம் மாறி கடலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். ஜெகதாம்பாளும் கலியபெருமாளை பிரிந்து சென்று பல வருடங்கள் ஆகிறது. பிள்ளைகள் யாரும் தொடர்பில் இல்லை.

இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சரோஜா என்பவரை கலியபெருமாள் இரண்டாவதாக திருமணம் செய்தார். அவருக்கு 8 மகள்களும், அண்ணாதுரை என்ற ஒரு மகனும் உள்ளனர். அனைத்து மகள்களுக்கும் திருமணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். 2-வது மனைவி சரோஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

கலியபெருமாள் நகை, பணத்துடன் சற்று வசதியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய கலியபெருமாள் சாப்பிட்டு விட்டு மாடி அறையில் தூங்க சென்றார்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு கலியபெருமாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதியினர் ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கலியபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங் கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி. அபிநவ் குமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏராளமான நகை மற்றும் பணம் வைத்திருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அதனை கொள்ளையடிக்கும் நோக்கில் வந்து கலியபெருமாளை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News