செய்திகள்

தேர்தல் நடந்தால் அமைச்சர்கள் கூட டெபாசிட் இழப்பார்கள்: தினகரன் ஆவேச பேட்டி

Published On 2017-09-12 07:41 GMT   |   Update On 2017-09-12 07:41 GMT
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்த டி.டி.வி. தினகரன் தற்போது தேர்தல் நடந்தால் அமைச்சர்கள் கூட டெபாசிட் இழப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு பதிலடி கொடுத்து டி.டி.வி. தினகரன் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி அணியினர் இன்று அவர்கள் நடத்தியது பொதுக்குழு கூட்டமே அல்ல. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டும்தான் உண்டு.

சசிகலாவை இவர்கள் தான் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். அதன் பிறகு அவர் ஜெயிலுக்கு சென்றதும் ஒரு மாதம் கூட பொறுக்காமல் இவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார்கள்.

அம்மா இருந்த இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என்றார்கள். இன்று முன் வரிசையில் அம்மா இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்.சும், ஈ.பி.எஸ்.சும் அமர்ந்து இருக்கிறார்கள்.

இப்போது நடப்பது அம்மா ஆட்சி அல்ல. பழனிசாமி அன்டு கம்பெனி ஆட்சி தான் நடக்கிறது.

துரோகமும் துரோகமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. இவர்கள் போடும் தீர்மானங்கள் செல்லுமா? செல்லாதா? என்பதை ஐகோர்ட்டுதான் முடிவு செய்யும்.


நாங்கள் அம்மாவின் வழியில் செயல்படுகிறோம். எங்களால் அம்மா இருந்த இடத்தில் ஓ.பி.எஸ்.சையும், ஈ.பி.எஸ்.சையும் பார்க்க முடியவில்லை.

அதிமுகவையும், அதன் 1½ கோடி தொண்டர்களையும் கட்டி காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுங்கள். அம்மா ஆட்சியை கொண்டு வாருங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.

இவர்கள் ஆட்சியை அகற்றுவதற்கான வேலையை தொடங்கி விட்டேன். இந்த ஆட்சி நீடிக்க கூடாது என்றால் தி.மு.க.வோடு கூட்டணி என்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு தேர்தலை சந்திக்க பயம்.

தேர்தலில் போட்டியிட்டால் அமைச்சர்கள் கூட டெபாசிட்டை இழப்பார்கள். கட்சி எங்களிடம்தான் இருக்கிறது என்றார்கள். அப்படியானால் ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தியுங்கள்.

நீங்களும் வேட்பாளர்களை நிறுத்துங்கள், நாங்களும் வேட்பாளர்களை நிறுத்துகிறோம். யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை பார்த்து விடலாம்.

பதவி போய்விட்டால் என்ன முடியும்? என்ற மனநிலையில்தான் பலர் அங்கே ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பதவி போய் விட்டால் அனைவரும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

போதிய மெஜாரிட்டியை இழந்து விட்ட நிலையில் நீங்களே தார்மீக பொறுப்பு ஏற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்களை கூட்டத்தை கூட்டி முதல்- அமைச்சரை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன். இந்த ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பது ஊரறிந்த வி‌ஷயம்.

கவர்னர் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும். நாங்கள் அவரை சந்தித்த போது கொஞ்சம் அவகாசம் தாருங்கள் என்றார். கவர்னருக்கு இந்த ஆட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை கவர்னருக்கு உள்ளது.

இன்னும் 2 நாட்கள் பொறுத்து இருப்போம். கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்.

தேர்தல் வந்தால் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும்தான் போட்டி ஏற்படும். அம்மாவின் உண்மை விசுவாசிகள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளனர். ஆனால் தி.மு.க.வுடன் சேர்ந்து அம்மாவின் ஆட்சியை முடக்க நினைத்த ஓ.பி.எஸ்.சுடன் எடப்பாடி பழனிசாமி கைகோர்த்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் அமர்த்தியவரே சசிகலாதான். ஆனால் அவரை முதல்-அமைச்சர் ஆக்கியது தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்பட 5 அமைச்சர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களும் சில எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராவதை விரும்பாமல் வெளியேறினார்கள். அவர்களை நான் தான் தடுத்து நிறுத்தினேன்.

இந்த ஆட்சி நீடித்தால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். எனவே இந்த ஆட்சியை அகற்றும் வேலையை தொடங்கி விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News