செய்திகள்
அனிதாவின் சகோதரர் மணிரத்தினம்

கிருஷ்ணசாமி கூறும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது: மாணவி அனிதாவின் சகோதரர்

Published On 2017-09-08 10:14 IST   |   Update On 2017-09-08 10:14:00 IST
தி.மு.க. நிர்வாகி மீது டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மாணவி அனிதாவின் சகோதரர் கூறியுள்ளார்.
செந்துறை:

நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவி அனிதாவின் சாவில் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் மற்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் நேரடியாகவோ, மறைமுகமாவோ சம்பந்தப்பட்டு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டார்.

மேலும் அனிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். மேலும் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து மனு கொடுத்தார்.

இந்த நிலையில் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் சகோதரர் மணி ரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-


எங்களுக்கு உதவி செய்த தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு மீது புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தேவையில்லாமல் அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார். அவருடைய குற்றச்சாட்டு உண்மையல்ல. எங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பதை கிருஷ்ணசாமி நேரடியாக பார்த்தது கிடையாது. அது பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் தெரிந்தது போல் பேசிக்கொண்டிருக்கிறார்.

தயவு செய்து அவ்வாறு அவர் பேசக்கூடாது. காவிக்கு பின்னால் இருக்கிறோம் என்ற தைரியத்தில் அவர் பேசி கொண்டிருக்கிறார். எங்களை பற்றியும், எங்கள் குடும்பத்தை பற்றியும் தெரியாமல் அவர் பேசக்கூடாது. எங்களுக்கு உதவியவர்களை அவதூறாக பேசக்கூடாது. ஏற்கனவே நாங்கள் கஷ்டத்தில் உள்ளோம். இதுபோல் பேசுவதால் மேலும் கஷ்டமாக உள்ளது. உண்மையான நிலவரம் தெரியாமல் ஆதாரம் இல்லாமல் தன்னிச்சையாக டாக்டர் கிருஷ்ணசாமி பேசி வருகிறார்.

அவரை பற்றி தனிப்பட்ட முறையில் எதையும் சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு காலத்தில் அவரை அண்ணனாக நினைத்துள்ளேன். எனவே எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது போல் அவர் நடந்து கொள்ளக்கூடாது.

அனிதாவின் இறப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் உணர்வுள்ள அனைவரும் இணைந்து போராடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News