செய்திகள்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்ட பின் நிதியை பெறுவோம்: அனிதாவின் சகோதரர்

Published On 2017-09-04 10:35 IST   |   Update On 2017-09-04 10:35:00 IST
நீட் தேர்வினை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் இந்த நிதியை பெற்று கொள்கிறோம் என்று அனிதாவின் சகோதரர் உருக்கமாக கூறியுள்ளார்.

அரியலூர்:

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவா ரணநிதியும், அவரது குடும்பத்தில் படித்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதையடுத்து நிதியை வழங்குவதற்காக குழுமூரில் உள்ள அனிதாவின் வீட்டிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் உள்பட அதிகாரிகள் சென்றனர். அங்கிருந்த அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர்கள் மணிரத்னம், சதீஷ்குமார், பாண்டியன், அருண்குமார் ஆகியோரிடம் அரசு சார்பில் அனிதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

பின்னர் அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர். ஆனால் அதனை அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர்கள் வாங்க மறுத்து விட்டனர்.

இது குறித்து அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கூறியதாவது:-

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவ கனவு தகர்ந்ததை எண்ணி தான் எனது தங்கை உயிரை மாய்த்து இருக்கிறார். நீட் தேர்வை நடைமுறைப்படுத்திய இரு அரசுகள் தான் ஒரு வகையில் காரணமாய் இருக்கின்றன. எனவே இந்த தொகையை நாங்கள் வாங்கினால் அது தங்கை அனிதாவின் மரணத்தை கொச்சைப்படுத்தும் படியாக மாறிவிடும்.

நீட் தேர்வினை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் இந்த நிதியை பெற்று கொள்கிறோம் என உருக்கமாக கூறினார்.

எனினும் நிதியை வாங்கி கொள்ளுமாறு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அனிதாவின் குடும்பத்தினர் நிதியை வாங்காமல் இருப்பது தொடர்பான தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கலெக்டர் உள்ளிட்டோர் நிதியை வழங்காமல் திரும்பி சென்றனர்.

Similar News