செய்திகள்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: பவானிசாகர் அணை நீர்மட்டம் 60 அடியை தாண்டியது

Published On 2017-08-31 16:32 GMT   |   Update On 2017-08-31 16:32 GMT
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி இருப்பது ஈரோடு மாவட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வாய்க்காலில் உயிர்நீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
சத்தியமங்கலம்:

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது.

கேரள மாநிலத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான ஊட்டி, கோத்திகிரி, அப்பர் பவானி, கொடநாடு மற்றும் கூடலூர் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பெய்து வருகிறது.

இதனால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறட்சியின் போது 37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. கடந்த 28-ந் தேதி மழை குறைந்து அணைக்கு வினாடிக்கு 647 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. 29-ந் தேதி நீர்பிடிப்ப பகுதிகளான ஊட்டி, கொடநாடு, கூடலூர் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்தது.

இதனால் அணைக்கு வினாடிக்கு 1526 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை மேலும் அதிகரித்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.

ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி 58.58 அடியாக அணையின் நீர் மட்டம் இருந்தது. நேற்று பகலில் பல இடங்களில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 60 அடியை தாண்டியது. நேற்று ஒரே நாளில் மட்டும் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 60.15 அடியாக இருந்தது. அணைக்கு 5900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அணையின் நீர்மட்டம் 60 அடியை தாண்டி இருப்பது ஈரோடு மாவட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வாய்க்காலில் உயிர்நீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
Tags:    

Similar News