செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 85 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்கு

Published On 2017-08-31 11:10 GMT   |   Update On 2017-08-31 11:11 GMT
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி 67 பேரிடம் ரூ. 85 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை கடம்பக் குடியைச் சேர்ந்த நித்தியன் மகன் சித்திரைவேல் (வயது 25). இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

இதற்காக மதுரை கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்தி வரும் முகமது இஸ்மாயில், பங்குதாரர் ஸ்டீபன்ராஜ் ஆகியோரை அணுகி பணம் கொடுத்தார்.வாக் குறுதி அளித்தபடி சித்திரை வேலுக்கு வேலை வாங்கித் தரவில்லை.

இதே போன்று இருவரும் 26 பேரிடம் தலா ரூ. 45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 45 லட்சம் வாங்கிக்கொண்டு போலியாக விசா கொடுத்துள்ளனர். ஆனால் வெளிநாட்டு வேலை வாங்கிக்கொடுக்கவில்லை.

இது குறித்து சித்திரைவேல் கொடுத்த புகாரின் பேரில் முகமது இஸ்மாயில், ஸ்டீபன்ராஜ் ஆகியோர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், தொண்டி ரோடு, அண்ணா நகரைச் சேர்ந்த கருணாகரன் மகன் பிரவீன் (27) என்பவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

அவர் பழங்காநத்தம் பகுதியில் வெளிநாட்டு வேலை ஏஜென்சி நிறுவனம் நடத்தி வரும் ஸ்டீபன்ராஜ், அவரது மனைவி மற்றும் நிர்வாக இயக்குநர் குமார், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரிடம் பணம் செலுத்தினார். பின்னர் பிரவீனுக்கு வேலை வாங்கிக்கொடுக்கவில்லை.

இதேபோன்று 4 பேரும் 41 பேரிடம் ரூ. 45 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 40 லட்சம் வாங்கிக்கொண்டு போலி விசா கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

இது குறித்து பிரவீன் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாநகர மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News