செய்திகள்

நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு சேதம்: விவசாயி கைது

Published On 2017-08-31 11:18 IST   |   Update On 2017-08-31 11:18:00 IST
குடியாத்தம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு சேதமடைந்த சம்பவத்தையடுத்து விசாரணை நடத்திய போலீசார் விவசாயி ஒருவரை கைது செய்தனர்.
குடியாத்தம்:

குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கே.மோட்டூர் சாலையோரப்பட்டி கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள இந்த வனப்பகுதியில் அரிய வகை வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில் சாலையோரப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை 10.30 மணி அளவில் நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் பஸ் நிறுத்தம் அருகேயிருந்த ஜெகதீசன் (வயது44) என்பவருக்கு சொந்தமான வீட்டின் முன்புறம் சேதமடைந்தது. நாட்டு வெடிகுண்டு வெடித்த சத்தம் அங்கிருந்த 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கேட்டதாக கூறப்படுகிறது.

இதைக் கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, பஸ் நிறுத்தம் அருகே வந்து பார்த்தனர். உடனே பரதராமி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சாலையோரப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகளை சமூக விரோத கும்பல் வேட்டையாடி வருவதாகவும், குறிப்பாக காட்டுப் பன்றிகளை குறிவைத்து வேட்டையாடி வருவதாகவும் தெரிவித்தனர். இதில் ஒன்று தான் பஸ் நிறுத்தம் அருகே வெடித்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மணி மீது சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் சாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுந்தர் (35) மற்றும் அவரது தம்பி தரும லிங்கத்தை (30) போலீசார் தேடி வருகிறார்கள்.

இதையடுத்து வெடிமருந்து தடயவியல் நிபுணர் குழுவினர் சாலையோரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஆய்வு செய்தனர்.

Similar News