விருதுநகர்-சிவகங்கை-ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சிவகங்கை:
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 8-வது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும். 20 சதவீத இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் வேலை நிறுத்தம் குறித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். வேலை நிறுத்தத்துக்கு பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. தமிழ் நாடு ஆசிரியர் சங்க கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என அறிவித்தது.
அதன்படி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டன.
90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் வரவில்லை. இதனால் மாணவ -மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர். சில பள்ளிகளில் விடுமுறை என அறி விக்கப்பட்டு இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் 8 ஆயிரம் பேர், ஆசிரியர்கள் 4 ஆயிரம் பேர் என 12 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில பங்கேற்றனர். 80 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. அரசு பள்ளிகளிலும் இதே நிலைமை நீடித்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கருணாநிதி, தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா அலுவலகங்களிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலை நிறுத்தம் காரணமாக அரசு பணிகள் முடங்கின.
விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை, ஆசிரியர்கள், வளர்ச்சி துறை உள்பட பல்வேறு துறைகளில் முழு அளவில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.