செய்திகள்

‘மாலைமலர்’ செய்தியை பார்த்து ஊர் திரும்பினேன்: வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை கண்ணீர்

Published On 2017-08-15 11:19 IST   |   Update On 2017-08-15 11:20:00 IST
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் தனது மகன் வீர மரணம் அடைந்த செய்தியை மாலை மலரில் பார்த்து தெரிந்து கொண்டதாக இளையராஜாவின் தந்தை கூறினார்.
சிவகங்கை:

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளைய ராஜா வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு 42 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. பின்னர் இளையராஜாவின் உடல் அவரது குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இளையராஜாவின் தந்தை பெரியசாமி (வயது52) வேலை தேடி வெளியூர்களுக்கு செல்வார். சில நாட்களுக்கு பிறகுதான் கிராமத்திற்கு திரும்புவார். மேலும் அவர் செல்போன் பயன்படுத்துவதில்லை.

வேலை தேடி சென்ற அவர், மகன் உடல் அடக்கம் செய்யும்வரை ஊர் திரும்பவில்லை. மகன் இறந்த செய்தியை தெரிவிக்க முடியாமல் குடும்பத்தினர் தவித்தனர்.


இதன் காரணமாக மகனின் இறுதி சடங்குகளை இளையராஜாவின் தாயார் மீனாட்சி செய்தார்.

இந்த நிலையில் பெரியசாமி நேற்று மாலை ஊர் திரும்பினார். அவர், இளையராஜா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய் விட்டதே என்று கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

பின்னர் அவர் கூறுகையில், கோவையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாகவும், “மாலைமலர்” செய்தியை பார்த்து ஊர் திரும்பியதாகவும் தெரிவித்தார்.

கோவையில் இருந்து பஸ்சில் புறப்பட்ட பெரிய சாமி, தாராபுரம்-பல்லடம் ரோட்டில் பஸ் பிரேக் டவுன் ஆகிவிட்டதால் மாறி, மாறி பஸ்கள் பிடித்து ஊர் வந்ததாக தெரிவித்தார்.

இந்த நிலையில் இளையராஜா வீரமரணம் அடைந்ததை தாங்க முடியாமல் அவரது உறவினர் மணிகண்டன்(22) வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Similar News