செய்திகள்

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையில் தனிப்பிரிவு - மார்க்சிஸ்ட் வரவேற்பு

Published On 2017-08-08 02:07 IST   |   Update On 2017-08-08 02:07:00 IST
சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
சென்னை:

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் பாதுகாப்பிற்கு காவல்துறையில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்திற்கு மட்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பளிக்க காவல்துறையில் தனிப் பிரிவு உருவாக்க வேண்டுமென்றும் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சாதி ஆணவக் கொலைக்கு உள்ளான விமலா தேவியின் கணவர் திரு.திலீப் குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆதரவோடும், முயற்சியிலும் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு 2016 ஏப்ரல் மாதம் மாதம், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதற்கான நிர்வாக ஏற்பாடுகளை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாததால் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் கே.சாமுவேல்ராஜ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு வரும் ஆக.10ம் தேதியன்று விசாரிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை பாதுகாக்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

அதேசமயம் இந்த தனிப்பிரிவு தமிழகம் முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News