செய்திகள்

புஞ்சை புளியம்பட்டி அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

Published On 2017-08-07 14:23 IST   |   Update On 2017-08-07 14:23:00 IST
புஞ்சை புளியம்பட்டி அருகே லாரி மோதி தனியார் பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி:

சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சி காளிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 21).

தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று இரவு தனது பைக்கில் புங்கம் பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக சத்தி- கோவை சாலையில் புங்கம்பள்ளி அருகே வளைவில் உள்ள பாலத்தின் அருகே சென்றபோது சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற வாழைக்காய் பாரம் ஏற்றிய மினிலாரி பைக் மீது மோதியது.

இந்த விபத்தில் ஜெயராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு ஆம்புலன்சில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய மினிலாரியை பறிமுதல் செய்தனர்.

விபத்தில் உயிரிழந்த ஜெயராஜின் உறவினர்கள் மற்றும் புங்கம்பள்ளி பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அதிவேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சத்தி- கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சத்தியமங்கலம் டிஎஸ்பி பழனிச்சாமி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மறியல் காரணமாக 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News