செய்திகள்

செந்துறை அருகே கொன்று புதைக்கப்பட்ட பெண் உடல் எலும்பு கூடாக மீட்பு: 2 பேர் கைது

Published On 2017-07-28 17:09 IST   |   Update On 2017-07-28 17:09:00 IST
மனைவியை கொலை செய்த கணவர், உறவினர் ஆகிய 2 பேரையும் சேலையூர் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவரது மகள் கனகவள்ளி (வயது 25). இவருக்கும், உடையார்பாளையத்தை சேர்ந்த அருணுக்கும்(30) 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அருண் மது குடித்து விட்டு, அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கனகவள்ளி கோபித்து கொண்டு, கடந்த ஆண்டு தனது தாய் வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் சென்னையிலுள்ள ஒரு துணிக்கடையில் கனகவள்ளி வேலை செய்தார்.

பின்னர் அருண் கனகவள்ளியை சமாதானம் செய்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். இந் நிலையில் கனகவள்ளி மாயமானார். இது குறித்து கனகவள்ளி சகோதரர் மணிவண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சென்னை சேலையூர் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், குடும்பத்தகராறில் உறவினர் கார்த்திக்குடன் சேர்ந்து தனது மனைவி கனகவள்ளியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டதாகவும், அவரது உடலை குவாகம் அருகேயுள்ள கொங்கனார்கோவில் காட்டுப்பகுதியில் புதைத்து விட்டதாகவும் அருண் தெரிவித்தார்.

இதையடுத்து கனகவள்ளியின் உடலை போலீசார் தேடினர். நேற்று மாலை 4.30 மணியளவில் கொங்கனர் சித்தர் கோவில் கிழக்கு பகுதியில் உள்ள முந்திரி காட்டில் தோண்டி பார்க்கும் போது அதில் மண்டை ஓடு, உடல் உறுப்புகளின் எலும்புகள், பெண்ணின் தலைமுடி, சேலைதுணிகள், தாலி, உள்ளிட்டவை கிடைத்துள்ளது.கிடைத்த உறுப்புகளை சேகரித்துகொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதற்காக எடுத்து சென்றுள்ளனர்.

கனகவள்ளியை கொலை செய்த அவரது கணவர் அருண், உறவினர் கார்த்திக் ஆகிய 2 பேரையும் சேலையூர் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News