செய்திகள்

கடன் தொல்லை காரணமாக தி.மு.க. நகர செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-07-27 16:16 GMT   |   Update On 2017-07-27 16:16 GMT
கடன் தொல்லை காரணமாக கீரனூர் தி.மு.க. நகர செயலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தி.மு.க. நகர செயலாளரான பழனியப்பன்(வயது 54). இவர் கீரனூர் கடைவீதியில் செருப்பு கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை வழக்கம்போல கடைக்கு சென்ற அவர், கடையின் ஒரு பக்க கதவை திறந்து வைத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது கடைக்கு வந்த பழனியப்பனின் உறவினர் ஒருவர் கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் பழனியப்பன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் உதவியுடன் பழனியப்பனை கீழே இறக்கி சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

மேலும் பழனியப்பன் கடையில் இருந்து அவர் எழுதிய வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில், தான் பெற்ற கடனை சிலர் திருப்பி கேட்டு தொந்தரவு கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பழனியப்பனுக்கு ஹேமலதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட பழனியப்பன் குடும்பத்தினரை தி.மு.க. பிரமுகர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
Tags:    

Similar News