செய்திகள்

கிரண்பேடி மீது தனிப்பட்ட வெறுப்பு கிடையாது: நாராயணசாமி பேட்டி

Published On 2017-07-27 09:53 GMT   |   Update On 2017-07-27 09:53 GMT
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பற்றி எனக்கோ, என் அரசுக்கோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
ஆலந்தூர்:

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று தி.மு.க. போராட்டத்தை அறிவித்து உள்ளது. அந்த போராட்டத்தில் புதுவை காங்கிரஸ் கலந்து கொள்ளும். நானும் பங்கேற்பேன்.

2 ஆண்டுக்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று புதுவை மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். தமிழக பாடத்திட்டம் தான் புதுவையில் நடத்தப்படுகிறது.

எனவே நீட் தேர்வில் புதுவை மாநிலத்துக்கும் விலக்கு வேண்டும். இது குறித்து நேற்று கூட மத்திய நிதி மந்திரி மற்றும் சுகாதார மந்திரியிடம் பேசி இருக்கிறேன்.



புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பற்றி எனக்கோ, என் அரசுக்கோ தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது. புதுவை மாநிலத்துக்கு என்று யூனியன் பிரதேச சட்டம் உண்டு. அதற்கு உட்பட்டு நடந்தால் வரவேற்போம். விதிமுறை மீறி நடந்தால் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் அரசு மாநில உரிமையை நிலை நாட்டும்.

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மத்திய அரசு பல்கலைக்கழகத்தில் எம்.பி-ல் மற்றும் பி.எச்.டி. படிப்புக்கு மாணவர்கள் இந்தியில்தான் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது முழுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மத்திய அரசு இந்தி திணிப்பு வேலையை மறைமுகமாக செய்ய திட்டமிட்டு வருகிறது. இதனை நிறுத்தி கொள்ள வேண்டும்.

வந்தே மாதரம், தேசிய கீதம் பாடுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News