செய்திகள்

அறந்தாங்கி நெல் குடோனில் பயங்கர தீ: ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2017-07-21 19:35 IST   |   Update On 2017-07-21 19:35:00 IST
அறந்தாங்கி நெல் குடோனில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
அறந்தாங்கி:

அறந்தாங்கியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். தொழிலதிபரான இவர் அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதியில் நெல்கடை நடத்தி வருகிறார். நெல் மொத்த வியாபாரம் செய்யும் கலியபெருமாள் கடையின் பின்புறம் உள்ள குடோனில் நெல் பிடிப்பதற்கான கோணிகள் (சாக்குகள்), தராசுகள் போன்றவற்றை வைத்திருந்தார்.

மேலும் குடோனில் கலியபெருமாள் மற்றும் பணியாளர்களின் இருசக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கலியபெருமாள் குடோனில் வைக்கப்பட்டிருந்த சாக்கு மூடைகளில் திடீரென்று தீப்பற்றியது.

உடனே தீ மளமளவென்று சாக்கு மூடைகள், இருசக்கர வாகனங்களில் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

குடோனில் தீப்பற்றி எரிவதை பார்த்த அவ் வழியே சென்றவர்கள் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் குடோனில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான சாக்குகள், தராசுகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமானது. குடோனில் மின்இணைப்பு இல்லாத நிலையில் தீப்பற்றி உள்ளதால், யாரேனும் சமூக விரோதிகள் தீவைத்துள்ளனரா? என்ற கோணத்தில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News