வேளாங்கண்ணியில் டாஸ்மாக் மதுவிற்ற ரூ.2¾ லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள்
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் வேதாரண்யம் மருதூர் தெற்கு பகுதியை சேர்ந்த மணிவாசன்(வயது 46) மேற்பார்வையாளராக பணி புரிந்து வருகிறார்.
இதே கடையில் திருக்குவளை தாலுகா மாராச்சேரியை சேர்ந்த செல்வம் (42), நாகை செம்மட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுபாஷ்(42), அகரஒரத்தூர் தென்கரைவேலி பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி(48) ஆகியோர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு விற்பனையாளர்கள் செல்வம், சுபாஷ், பக்கிரிசாமி ஆகியோர் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை ஒரு கைப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு கடையை பூட்டினர். அப்போது விற்பனையாளர்களுக்கு தினமும் உணவு கொண்டு வரும் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த முருகானந்தம் (42) அங்கு வந்துள்ளார்.
அப்போது விற்பனையாளர்கள் கையில் வைத்திருந்த பணப்பையை முருகானந்தத்திடம் கொடுத்துவிட்டு கடையை பூட்டி உள்ளனர். அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் முருகானந்தம் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு, அவர்கள் வைத்திருந்த கத்தியால் முருகானந்தத்தின் கையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் வசூலான பணம் ரூ.2¾ லட்சத்தை கொள்ளையடுத்து கொண்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.