செய்திகள்

குத்தாலம் அருகே சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகை கடைக்காரரிடம் கொள்ளை முயற்சி - வாலிபர்கள் கைது

Published On 2017-07-14 21:07 IST   |   Update On 2017-07-14 21:07:00 IST
சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து நகை கடைக்காரரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை, திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் கமலக்கண்ணன்(38). இவர் இதே ஊரில் அடகுக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று இவரது கடைக்கு வாடகை காரில் வந்த 4 பேர் தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். தங்களின் உயர் அதிகாரி காரில் இருப்பதாகவும், அவர் விசாரணைக்கு அழைப்பதாகவும் கூறி கமலக்கண்ணனை அழைத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த கமலக்கண்ணன் காரின் அருகே சென்றுள்ளார்.

அப்போது மர்மநபர்கள் 4 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி கமலக்கண்ணனை மிரட்டி பணம்-நகைகளை கேட்டுள்ளனர். இதைக் கண்டு கமலக்கண்ணன் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவர்கள் கமலக்கண்ணன் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.500 பணத்தையும், கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினையும் பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். இதில் செயின் கீழே விழுந்து விட்டது. அதற்குள் அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டதால், நால்வரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.

இதுகுறித்து கமலக் கண்ணன் குத்தாலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், போலீசார் ராமமூர்த்தி, நரசிம்மபாரதி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில் மர்மநபர்கள் வந்த கார் மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை சுற்றி வளைத்தனர். அப்போது காரில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சேந்தங்குடி தென்பாதி தெருவைச் சேர்ந்த சந்தானம் மகன் ஜெகன்(29), பக்கிரிசாமி மகன் கடவுள் பாண்டியன்(27), அழகேசன் மகன் அருண் பாண்டியன்(24), ரெயிலடி கரிமேட்டு தெருவைச் சேர்ந்த தங்கராசு மகன் ராஜாமணி(25) என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் சேர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி திருவாவடுதுறையில் நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News