செய்திகள்

ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு: லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-07-11 16:02 IST   |   Update On 2017-07-11 16:02:00 IST
பெரியபாளையம் அருகே ஏரியில் மணல் அள்ளியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையத்தை அடுத்த சீஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் எடுக்க கனிம வளத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தனியாருக்கு அனுமதி அளித்து உள்ளது.

ஏரியில் இருந்து ராட்சத எந்திரங்கள் மூலம் அளவுக்கு அதிகமான சவுடு மண் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏரியில் பெரிய, பெரிய பள்ளங்கள் உருவானது. மேலும் அனுமதி பெறாமல் மணலும் அள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குவாரியில் இருந்து மணல் கடத்திய லாரிகள் பனையஞ்சேரி கிராமம் வழியாக சென்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகையிட்டனர். அங்கிருந்த லாரிகளையும் சிறை பிடித்தனர்.

பெரியபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் வரை சவுடு மண் குவாரி இயங்காது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News