செய்திகள்

இலவச வீடு கட்டித்தரக்கோரி அதிகாரியிடம் முறையிட்ட பெண்களால் பரபரப்பு

Published On 2017-07-06 17:12 GMT   |   Update On 2017-07-06 17:12 GMT
பெரம்பலூரில் இலவச வீடு கட்டித்தரக்கோரி அதிகாரியிடம் பெண்கள் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் ரோவர் ஆர்ச்-ஐ ஒட்டியுள்ள மதனகோபாலபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி சில வீடுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு மாற்றாக அரசு திட்டத்தின்கீழ் இலவச வீடு கட்டித்தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் நீண்ட நாட்களாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில் அந்த மக்களுக்கு எளம்பலூர் மலையடிவாரம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. எனினும் வீடு கட்டித்தருவதில் இழுபறியாக இருப்பதால் இது தொடர்பாக மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று வந்தனர்.

அப்போது மாவட்ட கலெக்டர் சாந்தா, கலெக்டர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மைய திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனால் அந்த பெண்கள் யாரிடம் மனு கொடுப்பது என தெரியாமல் நின்றனர். இதைக்கண்ட மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன் உடனடியாக அந்த பெண்களிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவரிடம் இலவச வீட்டினை விரைவில் கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் முறையிட்டு மனு கொடுத்தனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News