செய்திகள்

மானாமதுரை பைபாஸ் ரோட்டில் பாலம் கட்டுமான பணியில் தொய்வு

Published On 2017-07-06 22:34 IST   |   Update On 2017-07-06 22:34:00 IST
மானாமதுரை பைபாஸ் ரோட்டில் ரெயில்வே நிர்வாகம் காலதாமதம் செய்வதால் மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகிறது.
மானாமதுரை:

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை–பரமக்குடி இடையே 9 மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் மதுரை–ராமேசுவரம் அகல ரெயில் பாதையின் குறுக்கே கட்டப்படும் பாலமும் ஒன்று. ஒரு கி.மீ. தூரம் கொண்ட இந்த பாலம் கட்டுமான பணிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. தற்போது பாலம் கட்டுமான பணியில் ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களை அகற்றினால் தான் எந்தவித இடையூறும் இன்றி பாலம் கட்ட முடியும். ஆனால் அந்த மரங்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளன.

இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு, பாலம் பணிகள் நடப்பதால் மரங்களை வெட்ட வேண்டும் என்று தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ஆனால் இதுவரை மரங்களை அகற்றுவதற்கான அனுமதியை ரெயில்வே நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் மரங்களுக்கு மத்தியில் பெரும் இடையூறுகளுடன் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இத்துடன் பணிகள் பாதிக்கப்பட்டு, பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. ராட்சத தூண்களுக்காக இரும்பு கம்பி வளைவு அமைக்க முடியாமலும், சாரம் அமைக்க முடியாமலும் தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே பைபாஸ் ரோட்டில் பாலம் அமையும் இடத்தின் இருபுறமும் உள்ள மரங்களை அகற்றி பணிகள் விரைந்து நடைபெற ரெயில்வே நிர்வாகம் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News