பைக்ரேசில் மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண் பலி: 2 வயது குழந்தை உள்பட 4 பேர் கவலைக்கிடம்
கோவை:
திருப்பூர் மாவட்டம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் வானரசு. இவரது மனைவி ராஜாத்தி (வயது 39). ராஜாத்தி தனது அக்காள் மகள் கோகிலாவுக்கு (26) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ராஜாத்தி, கோகிலா மற்றும் அவரது குழந்தை பிரின்சி (2) ஆகியோருடன் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக இன்று காலை 11 மணியளவில் வந்தார்.
அப்போது பஸ்சை விட்டு அவர்கள் இறங்கியதும் ரோட்டை கடக்க நடந்து சென்றனர்.
அந்த சமயத்தில் ஒரு விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் , ரோட்டை கடக்க நடந்து சென்றவர்கள் மீது மோதியது.இதில் ராஜாத்தி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கோகிலா, அவரது குழந்தை பிரின்சி, மற்றும் கூடலூரை சேர்ந்த மணிகண்டன் (17) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரும் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார்.
காலை நேரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரோட்டில் திடீரென விபத்து நடந்ததும் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் படுகாயம் அடைந்த கோகிலா, பிரின்சி, மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபர் ஆகிய 4 பேரையும் மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 4 பேரும் கவலைக்கிடமான முறையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்தனர். மோட்டார் சைக்கிள் அருகே கிடந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அந்த வாலிபர் , கோவை ரத்தினபுரியை சேர்ந்த வாலிபர் பிரதீப் என தெரியவந்தது.
இதற்கிடையே இந்த விபத்தை பார்த்த சிலர் கூறும்போது,‘‘ விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் மிகவும் வேகமாக வந்தது. இந்த மோட்டார் சைக்கிளை தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிளும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ஒருவருக்கொருவர் முந்தி செல்ல வேகமாக வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் இறந்தார் என்று தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் பைக் ரேஸ் நடத்தியதால் இந்த் விபத்து நடந்ததுள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.கோவை அவினாசி சாலையில் காலை நேரங்களில் சில இளைஞர்கள் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களுடன் பைக் ரேஸ் நடத்தி வருகிறார்கள். ரோட்டில் 100, 120 கிலோ மீட்டர் வேகத்தில் சீட்டாக பறக்கிறார்கள்.
இதனால் ரோட்டை கடந்து செல்பவர்கள் உயிரை கையில் பிடித்து செல்லும் நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே இதுபோல் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை போலீசார் தடை செய்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,.