செய்திகள்

போராட்டம் நடத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி: மதுரை ஐகோர்ட்டு கிளை

Published On 2017-07-03 08:20 GMT   |   Update On 2017-07-03 08:20 GMT
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அதற்கு பதிலாக பல்வேறு பகுதியில் புதிய கடைகளை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தரும் முக்கியத்துறையாக டாஸ்மாக் உள்ளது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் தாக்கப்படுவதால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதோடு, அரசுக்கு வருவாயும் குறைகிறது. எனவே டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கடந்த மே 3-ந்தேதி தமிழக தலைமை செயலர், டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.


எனவே அந்த மனுவின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை சேதப்படுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பெண் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமி நாதன் அமர்வு, வழக்கில் பெண் போராட்டக்காரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க கோர என்ன காரணம்? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பெண்களை முன் வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என குறிப்பிட்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News