செய்திகள்

சென்னையில் கதிராமங்கலம் மக்கள் போராட்டமா?: தலைமை செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2017-07-02 13:48 GMT   |   Update On 2017-07-02 13:48 GMT
கதிராமங்கலம் மக்கள் சென்னையில் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், அச்சமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசார் தடியடி நடத்தியால் அந்த கிராமமே கலவர பூமியாக காட்சி அளித்து. போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இருப்பினும், மக்கள் தங்களது போராட்டத்தினை கைவிடவில்லை. கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு இரண்டாவது நாளாக இன்றும் கடையடைத்து போராட்டம் நடைபெற்றது. 

இதனிடையே, கதிராமங்கலம் கிராமத்திற்குள் நுழைய முயன்ற மதிமுக விவசாய அணிச்செயலர் முருகன் உட்பட 50 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.



கதிராமங்கலத்தில் ஒன்ஜிசிக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியமக்கள் மீது போலீஸ் தடியடிநடத்தியதும் கைதுசெய்ததும் கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு விபத்து தான், அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இந்நிலையில், கதிரமங்கலம் கிராம மக்களில் சிலர் போராட்டம் நடத்த சென்னை வந்துள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து, தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் பாஜக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, தஞ்சையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி உடனே தலையிட்டு தீர்வுக்காண கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல், கதிராமங்கலம் கிராமத்திலிருந்து காவல்துறையினர் வெளியேறாவிடில் ஜூலை 10ம் தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News