செய்திகள்

அ.தி.மு.க. அரசின் உயிர் மத்திய அரசிடம் உள்ளது: மதுரையில் தா.பாண்டியன் பேட்டி

Published On 2017-07-01 14:37 IST   |   Update On 2017-07-01 14:37:00 IST
அ.தி.மு.க. அரசின் உயிர் மத்திய அரசிடம் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மதுரை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் மக்கள் விரோத ஆட்சி, மாநில அரசின் செயலற்ற தன்மை ஆகியவற்றை விளக்குவதற்காக முக்கிய நகரங்களில் ஜூன் 25-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறோம்.

திருச்சியில் ஜூலை 5-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

2014 பொதுத் தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நாளில் இருந்து எந்த ஒரு திட்டங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வில்லை. திட்டங்களையெல்லாம் போகிற போக்கில் அறிவித்துக்கொண்டே போகிறார்கள்.

இதனை மக்கள் ஏற்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. இதற்கு நல்ல உதாரணம் பண மதிப்பு மீட்பு நடவடிக்கையாகும்.

கறுப்பு பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்கான நிதியை முடக்குவது என்கிற கோ‌ஷங்களுடன்தான் பண மதிப்பு நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பயனும் இல்லை.

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் எடுத்த எடுப்பிலேயே சாதாரண வாகன டயரின் விலை ரூ. 1400-ல் இருந்து ரூ. 1640 ஆக அதிகரித்துவிட்டது. இது தவிர மோட்டார் உதிரி பாகங்களின் விலை 18 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்து விட்டது. அரசின் நடவடிக்கையால் மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசில் ஒப்புக் கொள்ளப்பட்ட தலைமை இல்லை. அந்த கட்சியின் பெயரும், சின்னமும் தேர்தல் கமி‌ஷனிடம் உள்ளது. மாநில அரசின் உயிர் மத்திய அரசிடம் உள்ளது.

குட்கா, பான்மசாலா விவகாரத்தில் தொடர்புடைய உயர் போலீஸ் அதிகாரி டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News