செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய 50 பேர் மீது வழக்கு

Published On 2017-06-21 15:34 IST   |   Update On 2017-06-21 15:34:00 IST
கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவான்மியூர்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை ஆர்.டி.ஓ.க்கள் யுவராஜ், விஜயகுமார், நெல்லையப்பன் மற்றும் அதிகாரிகள் நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிவேகமாக வந்த 50-க்கும் மேற்பட்ட கார்களை சிறப்பு கருவி மூலம் கண்காணித்து மடக்கினர். காரை ஓட்டியவர் மீது உடனடியாக வழக்கு பதியப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகி உள்ளது. அபராதம் கட்டாத 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்கள் விதிமுறைக்கு உட்பட்ட வேகத்தில் செல்ல வேண்டும். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

Similar News