செய்திகள்
நண்பருடன் பைக்கில் சென்ற போது கார் மோதி இளம்பெண் பலி
நண்பருடன் பைக்கில் சென்ற போது கார் மோதி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை புதுவண்ணாரபேட்டையை சேர்ந்தவர் சுரேந்தர். ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் வில்லிவாக்கத்தை சேர்ந்த தோழி பிரியங்கா (20)வுடன் மோட்டார் சைக்கிளில் கோவளம் அடுத்த வடநெம்மேலி முதலை பண்ணைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியங்கா உயிரிழந்தார். சுரேந்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.