செய்திகள்
இடம்: எழும்பூர்

சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை

Published On 2017-06-20 03:35 GMT   |   Update On 2017-06-20 03:35 GMT
சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் விமான சேவை மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை:

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சில நாட்களாகவே அறிவித்து வந்தது. எனினும் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. மாலை வேளைகளில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது.

இந்நிலையில் அதன்படி நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து சென்னையில் பல இடங்களில் மழை பெய்தது. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக எழும்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

அதை தொடர்ந்து இரவு மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் உள்பட பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னைக்கு நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து 119 பயணிகளுடன் விமானம் வந்தது. பலத்த மழையால் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.

மேலும் கொச்சி, டெல்லி, பெங்களூரூ, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வந்த 6 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரம் வட்டமிட்டு அதன் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்கின. இதேபோல் சென்னையில் இருந்து மதுரை, பெங்களூரூ, கொச்சி, டெல்லி ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 6 விமானங்களும் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

பலத்த மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன நெரிசல்களில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்தனர். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட சாலைகளில் மழையாலும், தேங்கியிருந்த மழைநீராலும் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. குறிப்பாக கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து தாம்பரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.


Tags:    

Similar News