செய்திகள்

டி.ஜி.பி. அலுவலகம் அருகே வக்கீலுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2017-06-19 16:22 IST   |   Update On 2017-06-19 16:22:00 IST
டி.ஜி.பி. அலுவலகம் அருகே வக்கீலுக்கு சரமாரி அரிவாளால் வெட்டிய சம்பவம் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திருவான்மியூர்:

ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் கேசவன் (35). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆக இருக்கிறார்.

இன்று காலை 9 மணி அளவில் தனது மகன் மற்றும் மகளை சாந்தோமில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.

அவர்களை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பினார். போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் பின்புறம் கலங்கரை விளக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே 3 மோட்டார் சைக்கிள்களில் மர்ம நபர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கேசவன் மீது மோதினான்.

உடனே அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரும் அரிவாளால் கேசவனை சரமாரி வெட்டினார்கள். தலை, கழுத்து, கை மற்றும் கால்களில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் நடைபெறும் போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கலங்கரை விளக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் வக்கீல் கேசவனை அரிவாளால் வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கேசவன் அருகேயுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வக்கீல் கேசவனை வெட்டிய கும்பல் யார்? என தெரியவில்லை. இவர் இலவச சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் இலவசமாக ஆஜராகி வந்தார். இதனால் இவருக்கும், பல ரவுடிகளுக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

மேலும் இவர்களுக்கு எதிராக வாதாடியவர்கள் கூலிப்படையை ஏவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே அதை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ மூலம் துப்பு துலக்கப்படுகிறது.

இக்கொடூர சம்பவம் பட்டப்பகலில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்துள்ளது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News