செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம்: சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2017-06-14 13:09 IST   |   Update On 2017-06-14 13:09:00 IST
கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதி விசாரணை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.

அ.தி.மு.க. ஏற்கனவே 3 அணியாக உள்ளது. இப்போது மன்னார்குடி கோஷ்டியுடன் 4-வது அணியாக பிரிந்துள்ளது.

அ.தி.மு.க. அரசை கலைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை.

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆந்திர அரசு விதிமுறைகளை மீறி ஆறுகளில் தடுப்பணை கட்டி வருகிறது. இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜஸ்தானில் உரிய ஆவணங்களுடன் மாடுகள் வாங்கச் சென்ற தமிழக அதிகாரிகள் மீது பா.ஜனதா ஆதரவாளர்கள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News