செய்திகள்
மதுக்கடையை அகற்ற கோரி பள்ளி சீருடையுடன் மனு கொடுக்க வந்த அரசு பள்ளி மாணவிகள்.

மதுக்கடையை அகற்ற கோரி சீருடையுடன் வந்த மாணவிகள் - கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

Published On 2017-06-13 16:02 IST   |   Update On 2017-06-13 16:03:00 IST
ஈரோட்டில் மதுக்கடையை அகற்ற கோரி சீருடையுடன் அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட கலெக்டர் பிரபாகரனிடம் மனு கொடுத்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஈரோடு நொச்சிக்காட்டு வலசு பாலாஜி கார்டன் பகுதி மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

எங்கள் பகுதியில் 200 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு புதிதாக மதுக்கடை அமைய உள்ளதாக தெரிகிறது. அதற்கான இடத்தையும் பார்த்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த வழியாகத்தான் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். மேலும் இங்கு மாணவிகளின் மழலையர் பள்ளியும் உள்ளது.

இந்த இடத்தில் மதுக்கடை அமைந்தால் அவர்களுக்கு குடிமகன்களால் அச்சுறுத்தல் ஏற்படும் எனவே எங்கள் பகுதியில் மதுக்கடை அமைக்ககூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் வெள்ளி திருப்பூர் அரசு பள்ளி மாணவிகள் பள்ளிக்கூடத்தை புறக்கணித்துவிட்டு சீருடையுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பிறகு கலெக்டர் பிரபாகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

வெள்ளி திருப்பூர் மையப் பகுதியில் 9 வருடமாக ஒரு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையை அகற்ற கோரி பல முறை மனு கொடுத்துவிட்டோம். இந்த வழியாகத்ததான் மாணவ-மாணவிகள் செல்ல வேண்டியுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களை போதை ஆசாமிகள் கிண்டல் செய்கிறார்கள். ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள். இதனால் இந்த மதுக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணவிகள் அந்த மனுவில் கூறி உள்ளனர்.

Similar News