பண்ருட்டி அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து ரூ.25 லட்சம் சேதம்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ(வயது 48). இவர் அதே பகுதியில் மரக்கடை வைத்திருந்தார். அங்கு கட்டில், பீரோ போன்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஜான்போஸ்கோ வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிச்சென்றார். நள்ளிரவில் அவரது மரக்கடை தீ பிடித்து எரிவதாக ஜான்போஸ் கோவுக்கு செல்போனில் தகவல் வந்தது.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஜான்போஸ்கோ விரைந்து சென்று பார்த்தபோது கடை முழுவதும் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து அவர் பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் கடையில் விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு மரப் பொருட்களும், அவற்றை தயார் செய்வதற்கு பயன்படுத்தும் நவீன எந்திரங்களும் தீயில் கருகி நாசமாகின.
தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.25 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜான் போஸ்கோ காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரும் தீ வைத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.