செய்திகள்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தீவிபத்து அதிகரிக்க காரணம் என்ன?: அதிகாரிகள் ஆய்வில் தகவல்

Published On 2017-06-01 12:57 IST   |   Update On 2017-06-01 12:57:00 IST
தியாகராய நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தீவிபத்து அதிகரிக்க காரணம் என்ன என்பது பற்றிய விவரங்கள் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை:

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த முடியாததால் 7 மாடிகளுக்கும் மளமளவென்று தீ பரவியது. கரும் புகையும் அதிகம் சூழ்ந்ததால் தீயை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தீயும் கரும்புகையும் அதிகமாக வெளியேறிய காரணத்தால் தீயணைப்பு வீரர்களால் ஆரம்ப நிலையிலேயே தீயை அணைக்க முடியாமல் போனது.

மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தீ மளமளவென்று பரவி கட்டிடம் இடிந்து விழும் நிலைக்கு சென்றதற்கான காரணம் என்ன என்பது தெரியாமலேயே இருந்தது.

இதுபற்றி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் இன்று விசாரணை நடத்தினர். பொதுப்பணித் துறை (கட்டுமான பிரிவு) அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர். வருவாய்த் துறையினரும் விசாரணை நடத்தினர். வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், பொதுப் பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங், தலைமை பொறியாளர் விஜயராகவன், கண்காணிப்பு பொறியாளர் குமாரி ஷீலா உள்ளிட்ட அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தீ விபத்து அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்ற விவரம் தெரிய வந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் ஜெனரேட்டர்களுக்கு பயன்படுத்தக்கூடிய டீசல் லிட்டர் கணக்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது.


10-க்கும் அதிகமான பேரல்களில் இந்த டீசல் நிரம்பி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மின்கசிவால் ஏற்பட்ட தீ உடனடியாக டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பேரல்களில் பிடித்ததாலேயே கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. அப்போதுதான் பேரல்கள் வெடித்து சத்தம் கேட்டது. அதன் பிறகு தான் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர்.

இன்று காலையில் கட்டிடத்தின் தரை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. இதனை வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும் போது, ‘‘டீசல் பேரல்கள் இல்லாமல் இருந்திருந்தால் தீவிபத்தில் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது’’ என்று கூறினார்.

Similar News