வி.கைகாட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி பெண் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி தேளூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மனைவி சந்திரா (வயது 45). நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காட்டுப்பிரிங்கியம் வேளாண்மைகூட்டுறவு கடன் சங்க வங்கிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
வி.கைகாட்டி அருகே வந்த போது, அந்த வழியாக சிமெண்டு ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக இறந்தார். கருப்பையா படுகாயமடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடத்த இடத்தில் குவிந்தனர். பின்னர் விபத்து நடந்த பகுதிகளில் தொடர் விபத்து நடைபெறுவதாகவும், சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் உரிமம் இல்லாமலும், மதுபோதையிலும் லாரிகளை அதிவேகமாக இயக்குவதாலும் தான் இதுபோன்ற அப்பாவி பொதுமக்களின் உயிர் பறிபோவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் சிமெண்டு லாரிகள் ஓட்டும் டிரைவர்களிடம் உரிமம் மற்றும் அவர்கள் குடித்து விட்டு லாரி ஓட்டுகிறார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே போலீசார் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வி.கைகாட்டி சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த கருப்பையன் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.