செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-05-24 16:20 IST   |   Update On 2017-05-24 16:20:00 IST
குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆடூர் அகரம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் வந்து மது அருந்திவிட்டு சென்றனர். அப்போது அவ்வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வந்தனர். இதனால் அப்பகுதி பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியானது.

இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆடூர் அகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிடாது பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குறிஞ்சிப்பாடி துணை தாசில்தார் ஆனந்த் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 15 நாட்களுக்குள் இந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News