செய்திகள்

விருதுநகர் அருகே இன்று காலை தனியார் பஸ்கள் மோதல்: 20 பயணிகள் படுகாயம்

Published On 2017-05-23 22:44 IST   |   Update On 2017-05-23 22:45:00 IST
விருதுநகர் அருகே இன்று காலை தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி யில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு விருதுநகருக்கு புறப்பட்டது.

சென்னல்குடி நிறுத்தத்தில் பஸ் நின்றபோது மின்னல் வேகத்தில் வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் பின்னால் மோதியது. இதில் 2 பஸ்களில் இருந்த 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த முனியசாமி (வயது 40) ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலும், நாராயண குரும்பன்பட்டியை சேர்ந்த சோலையம்மாள் (85) மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சென்னல்குடி கிராம மக்கள் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைக்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

விருதுநகரில் இருந்து சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை அதிக அளவில் ஏற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் பஸ்கள் விதிகளை மீறி அசுர வேகத்தில் செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடந்து வருகிறது. சில சமயங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை “கவனிக்கும்” போலீசார், கண் எதிரே விதிமுறைகளை மீறி செல்லும் தனியார் பஸ், லாரி, கார் போன்றவற்றை கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

எனவே போலீசார் விதியை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News